புத்ராஜெயா, ஆக 23- எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவன வழக்கின் மேல் முறையீட்டை விசாரிப்பதிலிருந்து தலைமை நீதிபதி துன் மைமுன் துவான் மாட் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரி டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து தலைமை நீதிபதி விலகிக் கொள்ளக் கோரும் விண்ணப்பத்தை தமது தரப்பு நேற்றிரவு தாக்கல் செய்ததாக அந்த முன்னாள் பிரதமரின் முதன்மை வழக்கறிஞர் ஹிஷ்யாம் தே போ தெய்க் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விண்ணப்பத்தின் நகல் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
எனினும், இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட அரசுத் தரப்பின் இடைக்கால வழக்கறிஞர் டத்தோஸ்ரீ வீ. சிதம்பரம், அந்த விண்ணப்பத்தின் சீல் வைக்கப்பட்ட பிரதிநிதியை தமது தரப்பு இன்னும் பெறவில்லை என்றும் அது தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் வரை நீதிபதியை மீட்டுக் கொள்வது தொடர்பான மனுவை விசாரிக்க முடியாது என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எதிர்த்தரப்பு வழக்கறிஞரை நோக்கி, பிரதான மேல்முறையீடு தொடர்பில் ஏதாவது சமர்ப்பிக்க விரும்புகிறீர்களா என வினவினார். அதற்கு இல்லை என்று ஹிஷ்யாம் பதிலளித்தார்.


