கோலாலம்பூர், ஆக 23- சட்டவிரோத நாணய மாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வங்காளதேசி தலைமையிலான கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறையினர் முறியடித்துள்ளனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் இந்த கும்பலின் முக்கியப் புள்ளி உள்பட அறுவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத நாணய மாற்று மையங்களாக செயல்பட்டு வந்த மூன்று கைபேசி விற்பனை மையங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 26 முதல் 40 வயது வரையிலான அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.
இந்த சட்டவிரோதக் கும்பலின் முகவராக செயல்பட்டு வந்த வங்காளதேச ஆடவர் ஒருவர் கடந்த 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இக்கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த வணிக மையங்களில் ஊழியர்களாக வேலை செய்து வந்தவர்களாவர். இந்தக் கும்பலின் மூளையாக செயல்பட்டு வந்த 36 வயது ஆடவனைக் கைது செய்த போது அவரிடம் அடையாளப் பத்திரம் எதுவும் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது சட்டவிரோத நாணய மாற்று நடவடிக்கையில் பெறப்பட்டதாக நம்பப்படும் 44,035 வெள்ளியும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாதம் 12 லட்சம் வெள்ளி வரையிலானத் தொகை இந்தோனேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதை அக்கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.


