பெட்டாலிங் ஜெயா, ஆக 23- சுபாங் ஜெயா மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் நியமிக்கப்பட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில துணைப் போலீஸ் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் எஸ்ஏசி அப்துல் காலிட் ஓத்மானுக்கு பதிலாக இவர் இப்பொறுப்பை ஏற்கிறார்.
வான் அஸ்லான் இதற்கு முன்னர் நெகிரி செம்பிலான் மாநில குற்றப்புலனாய்வுத் துறையின் (உளவு/நடவடிக்கை) துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த பணி ஏற்பு மற்றும் ஒப்படைப்பு நிகழ்வு இங்குள்ள சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய வான் அஸ்லான், அப்துல் காலிட் வழங்கிய சிறப்பான பணியைத் தொடர்வதில் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக உறுப்பினர்கள் தமக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் இவ்வட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளை வழங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை வான் அஸ்லான் முழு அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் ஆற்றுவார் எனத் தாம் நம்புவதாக டத்தோ அர்ஜுனைடி தனதுரையில் கூறினார்.


