ஷா ஆலம், ஆக 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) நேற்று முன்தினம் கம்போங் மிலாயு சுபாங் மற்றும் குண்டாங்கில் நடத்திய ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
அவ்விரு இடங்களிலும் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இந்த விற்பனையில் 200 பேர் வரை கலந்து கொண்டதாக அக்கழகம் கூறியது.
இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்ட பொதுமக்கள் வெ.2.50 விலையில் விற்கப்பட்ட சமையல் எண்ணெய், வெ.13.00 விலையில் விற்கப்பட்ட கோழி வெ.12.50 விலையில் விற்கப்பட்ட ஒரு தட்டு முட்டை ஆகியவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
இவை தவிர, இறைச்சி, காய்கறிகள் மற்று மீன் ஆகியவையும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன.
வரும் 28 ஆம் தேதி கோல லங்காட், டத்தாரான் பந்தாய் பத்து சிப்பாட்டில் மாபெரும் மெர்டேக்கா மலிவு விற்பனையை தமது தரப்பு நடத்தவுள்ளதாகவும் அக்கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த மலிவு விற்பனை மாநிலம் முழுவதும் உள்ள 160 இடங்களில் நடத்தப்படும் எனவும் அது அறிவித்துள்ளது.


