புத்ராஜெயா, ஆக 23- எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 வெள்ளியை கையாடல் செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத் தொகையை ரத்து செய்யவும் வழக்கை தள்ளுபடி செய்யவும் கோரி டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்துள்ள மேல் முறையீடு மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்று தொடர்கிறது.
இன்றைய விசாரணையின் போது நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் நஜிப் தனது வாதத் தொகுப்பை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இன்றைய விசாரணையின் போது தனது கட்சிக்காரர் சார்பில் தாம் வாதத் தொகுப்பை சமர்ப்பிக்கப் போவதில்லை என்று நஜிப் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞரான ஹிஷ்யாம் தோ போ தெய்க் கூறியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஐவர் அடங்கிய அமர்வுக்கு தலைமையேற்றுள்ள நாட்டின் தலைமை நீதிபதி துன் மைமுன் துவான் மாட் தனது தீர்ப்பை உடனடியாக வழங்கக் கூடும் அல்லது பிறதொரு தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கட்சிக்காரரான நஜிப்பை தற்காப்பதற்கு வாய் மொழியாகக்கூட தாம் வாதத் தொகுப்பை சமர்ப்பிக்கப் போவதில்லை என்று ஹிஷ்யாம் கடந்த வெள்ளியன்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
நஜிப்பின் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய இந்த இறுதி மேல் முறையீட்டு வழக்கை துன் மைமுன் தலைமையில் சபா மற்றும் சரவா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தார் அபாங் ஹஷிம், கூட்டரசு நீதிபதிகளான டத்தோ நளினி பத்மநாபன், டத்தோ மேரி லிம் தியாம் சுவான், டத்தோ முகமது ஜபிடின் முகமது ஆகியோரடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
இந்த வழக்கில் இடைக்கால அரசுத் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றும் டத்தோ வீ. சிதம்பரம் கடந்த வெள்ளியன்று தனது வாதத் தொகுப்பை முடித்துக் கொண்டார்.


