கோலாலம்பூர், ஆக 22- கூட்டரசு தலைநகரில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் ஒப்ஹெலியா நடவடிக்கையில் எழுவரை கைது செய்த போலீசார் 31 கிலோ போதைப் பொருளை கைப்பற்றினர்.
இந்த அதிரடி சோதனையில் 23 முதல் 29 வயது வரையிலான ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் கம்போங் பாருவில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில் ஒரு பெண் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டதோடு ஒரு கிலோ கஞ்சா மற்றும் 958 கிராம் ஷாபு கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.
ஜாலான் அம்பாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின கார் நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அந்த எழு சந்தேகப்பேர்வழிகளும் வேலையில்லாதவர்கள் எனக் கூறிய அவர், அவர்களில் ஐவர் போதைப் பழக்கம் கொண்டவர்கள் என்பதோடு ஆறு குற்றப்பதிவுகளையும் கொண்டுள்ளனர் என்றார் அவர்.


