அலோர் ஸ்டார், ஆக 22- கடந்த ஜூன் மாதம் பேராக் ராஜா மூடா போல் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நபருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,000 வெள்ளி அபராதம் விதித்தது.
முகமது பாடில் லோப் (வயது 39) என்ற அந்த நபர் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 10 மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கெடா சுல்தான் அலுவலகத்தில் பணி புரியும் முகமது பைசால் அஸ்லி முகமது சாலேவிடம் தாம் பேராக் ராஜா மூடா எனக் கூறி நம்ப வைத்ததன் மூலம் சுல்தானை சந்திப்பதற்கான அனுமதியை பெற முகமது ஃபாடில் முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் காலை 11.30 மணியளவில் விஸ்மா டாருள் அமானில் உள்ள துவாங்கு சுல்தான் அலுவலக முகப்பிடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததை முகமது ஜூல்ஹில்மி லத்திப் முன்னிலையில் அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் ஏழாண்டுச் சிறை, அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 419வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


