ஷா ஆலம், ஆக 22- பொது மக்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இணைய வசதியை இலவசமாக ஏற்படுத்தித் தரும் முதல் ஊராட்சி மன்றமாக கிள்ளான் நகராண்மைக் கழகம் விளங்குகிறது.
நவீன தொழில்நுட்ப அலையை எதிர்கொள்வதையும் விவேக நகர் என்ற அந்தஸ்தை அடைவதையும் நோக்கமாக கொண்ட இந்த இலக்கவியல் மயத் திட்டம் டெலிகோம் மலேசிய நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
வைஃபை 5ஜி தயார் செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ..டி. எனப்படும் சேவை அடையாள கருவியுடன் தங்கள் உபகரணங்களை இணைப்பதன் மூலம் பொது மக்கள் 5ஜி இணைய சேவையைப் பெற முடியும் என அவர் சொன்னார்.
நேற்று, இங்குள்ள பாடாங் லாமான் ஸ்ரீயில் கிள்ளானில் வாகனமில்லா தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேரணி மெர்டேக்காவின் உயிர்நாடி எனும் கருப்பொருளிலான இந்நிகழ்வு 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.


