ஷா ஆலம், ஆக 22- குடிநுழைவு அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபர் இந்தோனேசிய பெண் ஒருவரிடம் கொள்ளையிட்டதோடு அவரை பாலியல் பலாத்காரமும் செய்தார்.
நேற்று அதிகாலை 6.50 மணியளவில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பாதிக்கப்பட்ட பெண்ணும் 30 வயது மதிக்கத்தக்க அவரின் தோழியும் பண்டான் இண்டாவிலுள்ள வேலையிடத்திற்கு சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.
அவ்விரு பெண்களும் சுமார் 4,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் மற்றும் ரொக்கத்தை அந்த ஆடவனிடம் பறிகொடுத்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஹோண்டா சிட்டி காரில் வந்த குடிநுழைவுத் துறை அதிகாரி என கூறிக் கொண்ட இரு நபர்களால் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
கடப்பிதழ் மற்றும் வேலை பெர்மிட்டை சோதனையிடப் போவதாக அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் கூறியுள்ளனர். பின்னர் அவ்விருவரையும் தங்கள் காரில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளனர்.
காரில் பயணிக்கும் போது அப்பெண்களிடமிருந்து நகைகளைப் பறித்துக் கொண்ட அவர்கள் செர்டாங் வட்டாரத்தில் ஒரு பெண்ணை மட்டும் இறக்கி விட்டு மற்றொரு பெண்ணுடன் சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை பலாக்கோங்கிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கொண்டுச் சென்ற கற்பழித்தப் பின்னர் அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர் என்று ஃபாரூக் தெரிவித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் மலாக்கா, ஜாசினில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் சந்தேகப் பேர்வழியைக் கைது செய்தனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


