சிப்பாங், ஆக 22- கடந்த 2018 முதல் 2011 வரை பதிவான ஏழு வழக்குகளில் தொடர்புடைய 11 லட்சம் வெள்ளி மதிப்பிலான சாட்சிப் பொருள்களை சிப்பாங் மாவட்ட போலீசார் அழித்தனர்.
பண்டார் பாரு சாலாக் திங்கி, சுங்கை பீலேக், சிப்பாங், டிங்கில் மற்றும் புத்ரா பெர்டானாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளும் அழிக்கப்பட்ட சாட்சிப் பொருள்களில் அடங்கும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் கூறினார்.
அந்த ஏழு வழக்குகளில் ஏழு உள்நாட்டினர் மற்றும் நான்கு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக சுங்கத் துறை சட்டத்தின் 135(1)(டி) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 427/379 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்.ஏ.சி. பகாருடின் மாட் தாயிப் சிப்பாங் போலீஸ் தலைமையகத்திற்கு மேற்கொண்ட பணி நிமித்த வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 406ஏ பிரிவுக்கேற்ப சிப்பாங் மாஜிஸ்திரேட் அயுனி இஸாரி சுலைமான் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த சாட்சிப் பொருள்கள் அழிக்கப்பட்டன என்றார் அவர்.


