புத்ரா ஜெயா, ஆக 22- அரசாங்கத்தின் ஐந்தாண்டுக் காலத் தவணை முழுமையாக முடிவுக்கு வந்தப் பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நிலையான தேதியை உறுதிப்படுத்த முடியும் என்ற அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் வோங் சின் ஹூவாட் கூறினார்.
இத்தகைய நடைமுறையை அமல்படுத்துவதன் வாயிலாக அடுத்த பொதுத் தேர்தலுக்கான உறுதியான தேதியை கொண்டிருக்க முடியும் என்பதோடு இந்த நிலையான ஆட்சிக் காலத்தின் மூலம் இந்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்த இயலும் அவர் சொன்னார்.
பொதுத் தேர்தலுக்கான நிலையான தேதி இல்லாதது அடிமட்ட மக்கள் வரை அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக விடுமுறை எடுப்பதில் போலீஸ்காரர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் சிக்கலை எதிர்நோக்க வேண்டி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் நடப்பு நடைமுறை நீண்டகாலத் திட்டங்களை வகுப்பதில் அமைச்சர்களுக்கும் சிரமத்தை உண்டாக்குகிறது. மேலும், ஆட்சி எப்போது மாறும் எனத் தெரியாத நிலையில் முதலீட்டாளர்களும் குழப்பமடைகின்றனர் என்றார் அவர்.
தற்போதைய நடைமுறையின் படி பிரதமர் தனது விவேகத்திற்குட்பட்டு ஐந்தாண்டு தவணை காலம் முடிவடைவதற்கு முன்பாவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் பரிந்துரைக்கலாம் என்று வோங் சொன்னார்.


