ஷா ஆலம், ஆக 22- மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டமான சிலாங்கூர் சாரிங் எதிர்காலத்தில் மேலும் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று மாநில பொது சுகாதாரக் குழுவின் ஆலோசகரான டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.
பொது மக்கள் தங்கள் உடலாரோக்கியம் மீது அக்கறை கொள்வதற்கும் நோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் உரிய அடித்தளமாக இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச மருத்துவத் திட்டம் விளங்குவதாக அவர் சொன்னார்.
இத்திட்டத்தை பிரபலப்படுத்துவதற்கான காலக்கட்டமாக இந்த ஓராண்டை நாம் பயன்படுத்துகிறோம். தங்கள் உடலாக்கியம் மீது மக்கள் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர்.
வரும் ஆண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருக்கிறோம். மருத்துவப் பரிசோதனைகளை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக சில கிளினிக்குகளை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். அதே சமயம், மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நினைவூட்டல்களை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவோம் என அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள செக்சன் 24இல் நேற்று நடைபெற்ற பத்து தீகா தொகுதி நிலையிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து குறிப்பாக, நகர்ப்புறவாசிகளிடமிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்து வருவதாக முகமது ஃபர்ஹான் தெரிவித்தார்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது மூத்த குடிமக்களின் பங்கேற்பு அதிகமாக இருந்த வேளையில் தற்போது இளைஞர்களும் இதில் அதிகளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.


