ஷா ஆலம், ஆக 22- ஆறு கடலோரப் போர்க்கப்பல்கள் (எல்.சி.எஸ்.) கொள்முதல் ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய அரசியல்வாதியின் பெயரை தாம் இன்று அம்பலப்படுத்த விருப்பதாக கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.
தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளதால் அந்த அரசியல்வாதியின் பெயரை அம்பலப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
பெரிய ஊழல் முதலைகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வேளையில் அதற்கு பதிலாக சிறு சிறு நெத்திலி மீன்கள் பலி கடா ஆக்கப்படுவதை தடுப்பதற்காக தாம் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயரை அம்பலப்படுத்தும் முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். மக்கள் பணத்தை கொள்ளையிட்ட ஊழல்வாதிகளுக்கு எதிராக நாம் போராடுவோம் என அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
இந்த எல்.சி.எஸ். ஊழல் ஒரு சிலரின் சுய நலத்திற்காக தொடக்க காலம் முதல் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மோசடி நடவடிக்கையாகும் எனக் கூறிய அவர், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என சம்பந்தப்பட்ட நபர் கூறினால் அது நம்புவதற்கு சாத்தியமே இல்லாத ஒன்று வர்ணித்தார்.
ஆறு எல்.சி.எஸ். போர்க்கப்பல்களில் ஐந்து இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில் முழுமையடைந்திருக்க வேண்டிய நிலையில் இது வரை 608.3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஒரு கப்பல் கூட தயாராகவில்லை என்று தேசிய கணக்காய்வுக்கு இம்மாதம் 4 ஆம் தேதி கூறியிருந்தது.


