ஷா ஆலம், ஆக 22- பத்து தீகா சட்டமன்றத் தொகுதியின் பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக படகு வாங்குவதற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் நிதி திரட்டி வருகிறார்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் குடியிருப்பாளர்களை மீட்கும் பணியை எளிதாக்கும் வகையில் அனைத்து மீட்பு படை உறுப்பினர்களுக்கும் லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர்க் காப்பு அங்கிகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
தற்போது படகு வாங்குவதற்கு நிதி திரட்டி வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்டதைப் போல் மீண்டும் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார் அவர்.
நேற்று இங்குள்ள செக்சன் 24 இல் நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இம்முறை நாங்கள் கூடுதல் தயார் நிலையில் இருக்க விரும்புகிறோம். எவ்வாறாயினும், ஆற்றில் நீரின் கொள்ளளவை அதிகரிக்க நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையும் (நட்மா) இதேபோல் எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி மாலை சுமார் 4.00 மணியளவில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஷா ஆலம் செக்சன் 25ல் உள்ள தாமான் ஸ்ரீ மூடா கிட்டத்தட்ட ஒரு மீட்டர் வெள்ளத்தில் மூழ்கியது.


