கோலாலம்பூர், ஆக 21- நரம்புப் பிரச்னையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை சித்திரவதை செய்தது தொடர்பில் அப்பெண்ணின் 60 வயது தந்தையும் அவரின் காதலியும் கைது செய்யப்பட்டனர்.
தனது 31 வயது மகளை துன்புறுத்தியதற்காக அவரின் தந்தையையும் 47 வயதுடைய அவரின் காதலியையும் அம்பாங், தாமான் ஸ்ரீ இந்தானில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் தாங்கள் கைது செய்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.
அம்பாங் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சம்பந்தப்பட்டப் பெண் கீழே விழுந்து விட்டதாக கூறி அவரின் குடும்பத்தார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அடித்தது அல்லது குத்தியதைப் போன்ற காயங்கள் அப்பெண்ணின் வலது கண் உள்ளிட்ட பாகங்களில் காணப்பட்டது மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டதாக முகமது பாரூக் மேலும் சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த வீட்டிலிருந்து துடைப்பம், துணியை தொங்க விடும் ஹேங்கர், மோப் கட்டை உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக அவ்விருவரும் வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


