புத்ரா ஜெயா, ஆக 18- டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவன வழக்கின் மேல் முறையீட்டில் இன்று திடீர் திருப்பமாக அந்த முன்னாள் பிரதமரின் சார்பில் வாதாடுவதிலிருந்து தாம் விலகிக் கொள்ள வழக்கறிஞர் ஹிஷ்யாம் தே போ தெய் இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விண்ணப்பித்தார்.
இந்த வழக்கிற்கு தயார் செய்யத் தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் அவர் சொன்னார்.
நஜிப்பின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் வான் மாட் தலைமையிலான ஐவரடங்கிய அமர்விடம் ஹிஷ்யாம் தனது இந்த முடிவை தெரிவித்தார்.
இந்த வழக்கில் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவுக்கு பதிலாக ஹிஷ்யாமை நஜிப் கடந்த மாதம் 26 ஆம் தேதி நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஷியாமின் விண்ணப்பத்திற்கு பதிலளித்த தலைமை நீதிபதி மைமுன், வழக்கறிஞர் என்ற முறையில் தனது கட்சிக்காரரை பிரதிநிதிக்கும் பொறுப்பிலிருந்து விலகக் கூடாது என்று கூறினார்.
சபா மற்றும் சரவா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தார் அபாங் ஹஷிம், கூட்டரசு நீதிபதிகளான டத்தோ நளினி பத்மநாபன், டத்தோ மேரி லிம் தியாம் சுவான், டத்தோ முகமது ஜபிடின் முகமது ஆகியோர் இவ்வழக்கின் இதர நீதிபதிகளாவர்.
இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கான எதிர்த்தரப்பின் மனுவை நீதிபதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை செவிமடுத்த தோடு அந்த விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான வலுவான காரணங்களையும் எடுத்துத்தந்தனர் என்று நீதிபதி மைமுன் சொன்னார்.
அந்த மனுவை நிராகரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை தெளிவாக எடுத்துரைத்தோம். உச்ச நீதிமன்றம் என்ற முறையில் நீதியை நிலைநாட்டுவதற்கான உள்ளார்ந்த அதிகார வரம்பு எங்களுக்கு உள்ளதையும் நீதிமன்றம் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான எங்களின் அதிகார வரம்பு என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்களா? என அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த வழக்கிலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொண்டால் உங்கள் கட்சிக்காரரை பிரதிநிதிக்க யாரும் இருக்க மாட்டார்கள். யாரும் பிரதிநிதிக்காக சூழலில் அவரை நீங்கள் விடுகிறீர்கள். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என கடுமையான தொனியில் அவர் கேட்டார்.


