ஷா ஆலம், ஆக 18- புற்று நோய்க்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ பரிசோதனையில் பங்கு கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வாயிலாக மார்பக புற்றுநோய் அறிகுறிகளை தொடக்கத்திலேயே கண்டறிவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மலேசியாவில் அதிகம் பீடிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்குகிறது. நோயின் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் கடுமையான பாதிப்பை தவிர்க்கலாம். இல்லையேல், கீமோதெராப்பி எனப்படும் கதிரியக்க சிகிச்சை மேற்கொள்வதற்கு பெரும் தொகையை செலவிட வேண்டி வரும் என்றார் அவர்.
மலேசியாவில் பெண் புற்றுநோயாளிகளில் மிக அதிகமானோர் அதாவது 31.1 விழுக்காட்டினர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நோயினால் பாதிக்கப்படுவோரில் 43 விழுக்காட்டினர் தாமதமாக அதாவது மூன்றாம் அல்லது நான்காம் கட்டப் பாதிப்புக்குப் பின்னரே நோயின் பாதிப்பை உணர்கின்றனர் என்று அவர் சொன்னார்.
இவ்வார இறுதியில் கீழ்க்கண்ட இடங்களில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடைபெறவுள்ளது.
ஆகஸ்டு 20
• டேவான் செர்பகுணா தாமான் ஏசான் (புக்கிட் லஞ்சான் தொகுதி)
• பெட்டாலிங் ஜெயா, இவெண்ட் ஹால் அட்ரியால் மால் (பண்டார் உத்தாமா தொகுதி)
ஆகஸ்டு 21
• குண்டாங், டேவான் கம்போங் பெர்த்தாமா (குவாங் தொகுதி)
• டேவான் ஹெரிதாயர் ஹால், செக்சன் 24 (பத்து தீகா தொகுதி)


