ECONOMY

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கார் விற்பனையாளருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

18 ஆகஸ்ட் 2022, 6:10 AM
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கார் விற்பனையாளருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

கோலாலம்பூர், ஆக 18 - மூன்று கார் கொள்முதல் ஒப்பந்தங்களில் மோசடி செய்ததற்காக முன்னாள் கார் விற்பனையாளருக்கு ஒருவருக்கு இங்குள்ள இரு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுச் சிறை, இரண்டு பிரம்படிகள் மற்றும் 1,000 வெள்ளி அபராதம் விதித்து  தீர்ப்பளித்தன.

தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை 44 வயதான ரிஸால் ஓத்மான்  மாஜிஸ்திரேட்  நாடியா ஓத்மான் மற்றும் மாஜிஸ்திரேட் அய்னா அஸ்ஹாரா அரிபின் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.

மூன்று வாடிக்கையாளர்களிடம் கார்களை விற்பதாக நம்பவைத்து அவர்களிடம்  92,308.50 வெள்ளியைப் பெற்றதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிஸாலுக்கு மாஜிஸ்திரேட் அய்னா  ஓராண்டு சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும்  விதித்தார். மாஜிஸ்திரேட்  நதியா அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை, ஒரு பிரம்படி மற்றும் 1,000 வெள்ளி அபராதம் விதித்தார்.

இந்த அனைத்து குற்றங்களும் மே 13 மற்றும் ஜூலை 30 ஆம் தேதிகளுக்கு இடையில் செந்தூலில் உள்ள கார் நிறுவனத்தின் காட்சிக்கூடத்தில் புரியப்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் பத்தாண்டு வரையிலான சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும்  குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் ரிஸால் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.