ஷா ஆலம், ஆக 18- நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறிய குற்றத்திற்காக தெலுக் பங்ளிமா காராங்கிலுள்ள உணவகம் ஒன்றுக்கு ஐந்து குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.
உணவு விற்பனை மைய துணைச் சட்டம், சட்டம் 113 மற்றும் 1974 ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டிட சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று கோல லங்காட் நகராண்மைக் கழகம் கூறியது.
அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்டு ஊசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வது எண்ணெய் தடுப்பு சாதனங்களைப் பொருத்திருப்பது போன்ற நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பின்பற்றி வருவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
உணவுகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளில் உணவக உரிமையாளர்கள் பங்கேற்க வேண்டும் என்பதோடு உணவகங்கள் எப்போதும் சுத்தமாக இருப்பதும் பணியாளர்கள் பொருத்தமான உடைகளை அணிந்திருப்பது அவசியம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


