கிள்ளான், ஆக 18- கைவிடப்பட்ட பிராணிகளைக் காப்பதற்காக மூன்று காப்பகங்களை கிள்ளான் நகராண்மை கழகம் அடுத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளது.
பூலாவ் இண்டா, ஜாலான் சுங்கை பினாங்கில் ஒரு காப்பகமும் காப்பார் பெஸ்தாரி தொழில் பேட்டைப் பகுதியில் இரு காப்பகங்களும் அமைக்கப்படவுள்ளதாக நகராண்மைக் கழக துணைத் தலைவர் எலியா மாரினி டார்மின் கூறினார்.
சுமார் 1.6 ஹெக்டர் முதல் 3.2 ஹெக்டர் வரையிலான நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் இந்த மையங்கள் கைவிடப்பட்ட பூனைகள், மாடுகள் மற்றும் நாய்களை பராமரிக்கும் பணியை அடுத்தாண்டு முதல் மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற ஜெஜாக் வாரிசான் பட்டறையின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐம்பது பேராளர்கள் பங்கு கொண்ட இந்த பட்டறையை கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா தொடக்கி வைத்தார்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த பிராணிகள் காப்பகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வெகு தொலைவில் அமைக்கப்படுகின்றன என்று எலியா குறிப்பிட்டார்.


