ஷா ஆலம், ஆக 18- வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிக்கையை அதன் உரிமையாளர்கள் அலட்சியம் செய்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு கார்களை கோல லங்காட் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.
தாமான் பந்திங் ஜெயா, தாமான் ஸ்ரீ புத்ரா, ஜாலான் கம்போங் தெங்கா சாலை மற்றும் தாமான் டெலிமாவில் அந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மை கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
கைவிடப்பட்ட அந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதோடு அப்பகுதியின் தோற்றத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அது தெரிவித்தது.
அந்த வாகனங்கள் அப்புறப்படுத்தும்படி இதற்கு முன்னர் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதன் உரிமையாளர்கள் அதனை புறக்கணித்து விட்டனர் என்று நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.
வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை 1974 ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டிட சட்டத்தின் (சட்டம் 133) 46(1)(இ) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய இடமாக மாறும் அபாயம் உள்ளதால் தங்கள் வாகனங்களை பொது இடங்களில் நீண்ட காலத்திற்கு கைவிட வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


