ரவூப், ஆக 17- இருபது லட்சத்து நாற்பதாயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெண் வர்த்தகர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நோரிடா ஷகிரா அகுஸ் யாடி (வயது 28) என்ற அந்த மாது நீதிபதி அகமது ஃபைஸாட் யாஹ்யா முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2021 ஜனவரி 8 முதல் 2021 ஜூன் 20 வரையிலான காலக்கட்டத்தில் டி.எஸ்.எஸ். பெர்க்காட் எண்டர்பிரைஸ் எனும் தனது நிறுவனத்தின் மூலம் கோல லிப்பிஸ், மேபேங்க் வங்கியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 13 லட்சத்து 17 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சுஷி உணவகத்தை வாங்கியதன் மூலம் சட்டவிரோதமான முறையில் கிடைத்த பணத்தில் 242,770 வெள்ளி, 369,700 வெள்ளி, 32,500 வெள்ளி மாற்றியதோடு 80,000 வெள்ளியை அப்புறப்படுத்தியதாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட தொகையிலிருந்து ஐந்து மடங்கு கூடுதல் தொகை அல்லது 50 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டம் (சட்டம் 613) கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.


