கோலாலம்பூர், ஆக 17- இம்மாத தொடக்கத்தில் 25 மியன்மார் பிரஜைகளைக் கடத்தியதாக 17 வயது ஆடவர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு பாதுகாப்புச் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைகள் 2012) கீழ் சொஸ்மா பாதுகாப்பு சட்டத்தின்படி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதால் நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பதின்ம வயது நபரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இம்மாதம் 2ஆம் தேதி பிற்பகல் 12.05 மணியளவில் செந்தூல், தாமான் ஸ்ரீ கூச்சிங், ஜாலான் மஞ்சோய் 3 சாலையில் பிடிபடாமல் இருக்கும் மற்றொரு நபருடன் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் இருபதாண்டுச் சிறை, அபராதம் மற்றும் இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு சட்டத்தின் 26ஏ பிரிவு மற்றும் அச்சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இளம் வயதுடையவர் என்பதால் இந்த வழக்கு விசாரணை தொடர்பான செய்தியைச் சேகரிக்க ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.


