ஷா ஆலம், ஆக 17- மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு அனைத்து விதமான குற்றப் பதிவுகளுக்கும் ஐம்பது விழுக்காடு வரையிலான கழிவை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வழங்குகிறது.
கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டியும் இந்த சலுகை ஒரு மாத த்திற்கு வழங்கப்படுவதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த நகராண்மை கழகம் கடந்த 43 ஆண்டுகளாக மாவட்ட மன்ற அந்தஸ்தைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்டு மாதம் முதல் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த சலுகையைப் பயன்படுத்தி பொது மக்கள் தங்களின் அபராதத் தொகையைச் செலுத்தி விடுமாறு நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.
அபராத தொகையை பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தி இணையம் வாயிலாகவும் செலுத்தலாம் என்றும் அது கூறியது.
அபராத தொகையை ரொக்கமாக செலுத்த விரும்புவோர் சட்டஆலோசகப் பிரிவு முகப்பிடத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை அவ்வாறு செய்யலாம்.


