ஷா ஆலம், ஆக 17- சர்ச்சைக்குரிய கிராக்ஹவுஸ் காமெடி கிளப் முழுமையாக மூடப்பட்டது. தலைநகரின் வேறு எந்தப் பகுதியிலும் வர்த்தக பதிவு செய்ய முடியாத வகையில் அதன் உரிமையாளர் ஆயுள் காலத்திற்கு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் லைசென்ஸ் செயல்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்நபருக்கு எதிராக ஆயுள் காலத்திற்கு கோலாலம்பூர் வட்டாரத்தில் வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
வேறு பெயர் அல்லது நிறுவனங்களைப் பயன்படுத்தினாலும் அந்த கிளப்பின் உரிமையாளர் கோலாலம்பூரில் எந்த வர்த்தகத்தையும் பதிவு செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014 முதல் 2017 வரை பொழுதுபோக்கு லைசென்ஸ் பெற்றிராத காரணத்தால் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள அந்த காமெடி கிளப்பை மூட கோலாலம்பூர் மாநகர் மன்றம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உத்தரவிட்டது.
இனங்களை நிந்திக்கும் வகையிலான காணொளியை பதிவேற்றம் செய்தது தொடர்பில் அந்த கிளப்பின் இணை உரிமையாளர் ரிசால் வேன் கெய்சால் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி அந்த காமெடி கிளப்பில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் சமயத்தை கேலி செய்தது தொடர்பில் சித்தி நுர்மிரான அப்துல்லா (வயது 26) என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


