கோலாலம்பூர், ஆக 17- சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் கல்வி, சமூக மற்றும் பொருளாதார துறைகளில் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அம்மாநிலத்தில் முதன் முறையாக இந்தியர்களுக்கென சிறப்பு ஆலோசனை மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல இயக்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த ஆலோசனை மன்ற உருவாக்கம் குறித்த அறிவிப்பை இம்மாதம் 14 ஆம் தேதி வெளியிட்டதாக கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
பல துறைகளைச் சேர்ந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் நடத்திய கருத்தரங்கு ஒன்றின் பிரதிபலிப்பாக இந்த ஆலோசனை மன்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட 55 இயக்கங்கள் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகள், அதனைக் களைவதற்கான வழி முறைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தின. இதன் தொடர்ச்சியாக பத்து முதல் பதினைந்து கோரிக்கைகளை மந்திரி புசாரிடம் நாங்கள் முன்வைத்தோம். அதில் முதல் கோரிக்கை இந்த ஆலோசனை மன்றத்தை அமைப்பது தொடர்பானதாகும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடாக இருப்பதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதே இந்த ஆலோசனை மன்றத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வரையப்படும் ஒவ்வொரு திட்டமும் மூன்று முதல் ஆறு மாத காலத்தில் அமலுக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதும் இந்த இந்த மன்றத்தின் தலையாய கடமையாகும்.
அதோடு மட்டுமின்றி, ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு என குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். இந்தியர்களுக்காக அரசாங்கம் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் யாவை? அந்நோக்கத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளையும் நான் முன்வைத்துள்ளோம் என்று நிவாஸ் கூறினார்.
இந்த ஆலோசனை மன்றத்தை தாம் உள்பட ஒன்பது பேர் கொண்ட குழு வழி நடத்தும் என்றும் அவர் சொன்னார்.
இந்த ஆலோசனை மன்றம் குறித்த மேல் விபரங்களுக்கு 03-26931033 என்ற எண்களில் அல்லது enquiry@klsicci.com.my என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


