குவாந்தான், ஆக 17- ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறார்கள் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 15 மற்றும் 11 வயதுடைய அவ்விரு சிறார்களும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் பெரா, சுங்கை திரியாங்கில் நேற்று மாலை நிகழ்ந்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.52 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து திரியாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த புக்கிட் ஆங்கின் நீர் மீட்பு பணிப்படையினரும் இந்த தேடுதல் வேட்டையில் பங்கு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையின் படகுகள் மூலம் ஆற்றின் மேற்பரப்பில் தேடி மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


