கோலாலம்பூர், ஆக 17- அடுத்த பத்தாண்டு காலத்தில் நாட்டிலுள்ள மக்களில் குறைந்தது ஒரு கோடி பேர் நீடித்த ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்வதை சுகாதார அமைச்சு இலக்காக கொண்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள சுகாதார அமைச்சின் வெள்ளை அறிக்கையில் இது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் இதுவும் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
ஆகவே, அடுத்த பத்தாண்டுகளில் ஒரு கோடி பேர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான செயல் முறை, தரமான சேவையை கொண்ட செயல்முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய செயல்முறையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பது நமது முக்கிய கருப்பொருளாகும் என அவர் குறிப்பிட்டார்.
நடப்பிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் பேர் தவிர்ப்பதற்கு சாத்தியம் உள்ள நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.
2022 ஆம் ஆண்டு சுகாதாரக் கொள்கை உச்சநிலை மாநாட்டையொட்டி நேற்று இங்கு நடைபெற்ற நமது ‘சுகாதார பராமரிப்பின் எதிர்காலம்‘ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பரிந்துரையின் அமலாக்கத்தின் வழி நாட்டு மக்களில் ஒரு கோடி பேர் நீரிழிவு, இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், உயர்ந்த அளவு கொலோஸ்ட்ரோல் பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையை நாட மாட்டார்கள் என்றார் அவர்.


