ஷா ஆலம், ஆக 16- மாநில அரசின் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனையில் புற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட 2,078 பொதுமக்களில் 75 பேர் அந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து இரத்த மாதிரிகளும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மாநிலத்தின் 34 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை இயக்கங்களில் 12,000 த்திற்கும் அதிகமானோர் பங்கு கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்த எண்ணிக்கையில் சுமார் 10,000 பேர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட வேளையில் 2,078 பேருக்கு புற்று நோய் தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டது. என்றார் அவர்.
இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மருத்துவ பரிசோதனைகளில் பங்கு கொண்டவர்களில் பலர் முன்கூட்டியே செலங்கா செயலியில் பதிவு செய்திருந்த வேளையில் சிலர் நேரடியாக பரிசோதனை மையத்திற்கு வந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் குறைந்தது ஆண்டுக்கு இரு முறையாவது நடத்தப்பட வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து கருத்துரைத்த அவர், இந்த பரிந்துரையை பரிசீலிக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் எனினும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தே இதனை அமல்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.


