ஷா ஆலம், ஆக 16- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனை மூன்று இடங்களில் வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இந்த மக்கள் பரிவு விற்பனை இயக்கம் வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செக்சன் 25, பாசார் மாலாம் பகுதியில் நடைபெறும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை கம்போங் மிலாயு சுபாங் மற்றும் செக்சன் 7 பள்ளிவாசல் வளாகத்தில் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களும் ஷா ஆலம் வட்டாரத்தில் உள்ளன.
இந்த விற்பனையின் போது கோழி 13 வெள்ளி விலையிலும் சமையல் எண்ணெய் கிலோ 2.50 விலையிலும் பி கிரேடு முட்டை வெ.12.50 விலையிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை விலையிலும் மீன் ஒரு பாக்கெட் 10 வெள்ளி விலையிலும் விற்கப்படும்.
விலைவாசி உயர்வு காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்த மலிவு விற்பனையை நடத்தி வருகிறது. இத்திட்டம் மாநிலத்தின் 160 இடங்களில் ஆண்டு இறுதி வரை தொடரும்.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி கூறியிருந்தார்.


