கோலாலம்பூர், ஆக 5- ஸ்பெயின் நாட்டின் ரோவி பார்மா இண்டஸ்ட்ரியல் செர்விசஸ் நிறுவனத் தயாரிப்பான ஸ்பைவெக்ஸ் கோவிட்-19 தடுப்பூசியை 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
நேற்று இங்கு நடைபெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் 375வது கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதற்கு முன்னர் இந்த ஸ்பைவெக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் நிபந்தனையுடன் கூடிய பதிவு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பன்னிரண்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்காக பைசர்-பயோஎன்டெக், சீனாவின் சினோவேக் நிறுவனத்தின் கோரோனோ வேக், பார்மாநியாகா லைஃப்சைன்ஸ் சென்.பெர்ஹாட் மலேசியா ஆகிய தயாரிப்புகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.
அந்த தடுப்பூசி தொடர்ந்து ஆக்ககரமான பயனைத் தருவதை உறுதி செய்வதற்காக அதன் தரம், பாதுகாப்பு மற்றும் ஆக்கத்தன்மை மீதான சோதனையை தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


