ஷா ஆலம், ஆகஸ்ட் 5 - சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள பல கடைகளில் தங்கம் வாங்கி விற்கும் நடவடிக்கையில் நம்பிக்கை மோசடி புரிந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய சந்தேக நபரான சாலி என அழைக்கப்படும் 42 வயது மொத்த வியாபாரி மற்றும் 37 வயதுடைய அவரின் சகோதரர் ஆகியோர் பெட்டாலிங், பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
மற்றொரு நடவடிக்கையில் நகைக் கடை ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கடந்த ஏழு மாதங்களாக இந்த மோசடிச் செயலுக்கு அப்பெண் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள நகைக்கடையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கு தணிக்கையின் போது 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் குறைந்துள்ளதை கண்டறிந்த அதன் உரிமையாளர் கடந்த ஜூலை 31 அன்று போலீசில் புகார் செய்ததாக இக்பால் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகளின் சோதனையிட்ட போது பெண் ஊழியர் வாடிக்கையாளர் போர்வையில் கடைக்கு அடிக்கடி கடைக்கு வரும் சாலி என்ற பெண்ணுடன் வர்த்தகத்தை கவனித்துள்ளது தெரிய வந்துள்ளது . இந்த ஊழியர் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் சாலிக்கு 300 முதல் 500 கிராம் வரை அதிக எடையில் நகைகளைக் அவருக்கு கொடுத்துள்ளார் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அக்கும்பலிடமிருந்து 414,700 வெள்ளி ரொக்கம், 80 சவரன் நகைகள், 10 கைப்பேசிகள் மற்றும் வெ.700,000 மதிப்புள்ள டொயோட்டா ஹாரியர் வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


