ஷா ஆலம், ஆக 4- சொத்துடைமைத் துறையில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்காக அனைத்து கட்டிடங்களிலும் எல்.இ.டி. மற்றும் சோலார் விளக்குகளை பொருத்தும் இயக்கம் தீவிரப்படுத்தப்படும்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் ஐந்தாண்டு கால அமலாக்கத்தின் போது இந்த இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மத்திய அரசு மற்றும் தனியார் துறையினால் மேம்படுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உயர்கல்விக் கூடங்கள், விளையாட்டரங்குகள், சந்தைகள், பேரங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகளை இலக்காக கொண்டு இத்திட்டம் அமல் படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பாக ரூமா சிலாங்கூர் கூ திட்டங்களில் எல்.இ.டி. மற்றும் சோலார் விளக்குகளை பொருத்தும் பணி சிலாங்கூர் சொத்துடைமை மேம்பாட்டு வாரியம் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்களுடனான விவேக பங்காளித்துவத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்பின் கூரைப் பகுதிகள், காலியிடங்கள், ஜாடிகளில் பயிரிடுவதை நோக்கமாக கொண்ட நவீன பசுமை விவசாயத் திட்டக் கொள்கையை சீரமைக்கும் பணியில் தமது தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


