சிரம்பான், ஜூலை 30- ஐந்து வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு ஆடவர் மற்றும் இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்டார் ஸ்ரீ ஜெம்போல், மாஹ்சானில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 11.30 மணியளவில் ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வந்த போது அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூ சாங் ஹுக் கூறினார்.
கைதான அந்த 42 வயது ஆடவர் மீது குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் இரு குற்றப்பதிவுகள் உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைதானவர்களிடமிருந்து கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், விசாரணைக்காக தடுத்து வைப்பதற்காக நாளை அவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
ஐந்து வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில் ஆர்.குணசீலன் (வயது 42), கே.நாகம்மா (வயது 41) மற்றும் ஜி. நிஷா (வயது 21) ஆகியோரை போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
தாமான் ஸ்ரீ மாஹ்சானைச் சேர்ந்த அம்மூவரும் சித்திரவதை செய்யப்பட்ட அந்த சிறுமியின் உறவினர்கள் எனக் கூறப்படுகிறது.


