கோல திரங்கானு, ஜூலை 30- கியூபெக்ஸ் எனப்படும் அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் டத்தோ அட்னான் மாட்டுன் தாம் ஆகஸ்டு முதல் தேதி சந்திப்பு நடத்தவுள்ளதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி கூறினார்.
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்ற அந்த தொழிற்சங்கத்தின் கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று அவர் சொன்னார்.
கியூபெக்ஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கவனித்து ஆய்வு செய்வதற்காக வரும் திங்களன்று அதன் தலைவரை நான் சந்திக்கவுள்ளேன் என்றார் அவர்.
இங்குள்ள டேவான் பெசார் விஸ்மா டாருள் இமானில் நடைபெற்ற மாநில நிலையிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய மால் ஹிஜ்ரா நிகழ்வையொட்டி முகமது ஜூக்கிக்கு தோக்கோ மால் ஹிஜ்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கான குறைந்த பட்ச சம்பள விகிதத்தை 1800 வெள்ளியாக உயர்த்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அட்னான் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அண்மைய காலமாக ஏற்பட்டு வரும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக அரசு ஊழியர்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.


