கோலாலம்பூர், ஜூலை 30- கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மதங்களை இழிவுபடுத்தவோ, சிறுமைப்படுத்தவோ, கேலி செய்யவோ கூடாது என மக்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து மதங்களின் புனித த்தன்மையும் எந்நேரமும் காக்கப்படுவதோடு மதிக்கப்படவும் வேண்டும் என்று அவர் கூறினார்.
மதம் என்பது கேலிக்குரியதோ அல்லது பகடி செய்வதற்கு பயன்படக்கூடியதோ அல்ல என்றும் அவர் நினைவுறுத்தினார்.
இத்தகைய செயல்கள் இனவாதத்திற்கு வழிகோலும் என்பதோடு இத்தனை நாட்களாக நாம் கட்டிக் காத்து வரும் ஒற்றுமையையும் அழித்து விடும் என அஞ்சுகிறேன் என அவர் சொன்னார்.
இங்குள்ள கூட்டரசு பிரதேச பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற தேசிய நிலையிலான மால் ஹிஜ்ரா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்து கொண்டார்.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அமைச்சர்களும் பலரும் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.
நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மக்கள் தொடர்ந்து கட்டிக்காத்து வர வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய குடும்பம் வளப்பத்தின் உந்து சக்தி எனும் கருப்பொருளைக் கொண்ட இந்த ஆண்டு மால் ஹிஜ்ரா நிகழ்வுக்கேற்ப நிலையான மற்றும் வலுவான நாட்டை கட்டியெழுப்புவதற்கு நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரா புலம்பெயர்தலை நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


