ஷா ஆலம், ஜூலை 30- ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) தாக்கல் செய்துள்ள வெள்ளத் தடுப்புத் திட்டம் முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் (ஆர்.எஸ்.-1) வரையறுக்கப்பட்டுள்ள பெருந்திட்டத்திற்கேற்ப அமலாக்கப்படும் எனத் தாங்கள் நம்புவதாக கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
வெள்ளத் தடுப்புத் திட்ட அமலாக்கம் உண்மையில் ஆக்ககரமானதாக இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாவதாக அவர் சொன்னார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டம் பயனுள்ளதாகவும் ஆக்ககரமானதாகவும் இருக்கும் அதேவேளையில் முதலாவது சிலாங்கூர் திட்டத்திற்கேற்பவும் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பெருந்திட்டத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வெள்ளத் தடுப்புத் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் கூறினார்.
அதே சமயம், சுமார் 16 கோடி வெள்ளி செலவில் ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் ஆக்ககரமானதாக உள்ளதை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தை உலுக்கிய மிகப்பெரிய வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட ஆறு மாத காலத்திற்குள் ஷா ஆலம் வெள்ள நடவடிக்கைத் திட்டத்தின் வாயிலாக ஆக்ககரமான வெள்ளத் தணிப்புத் திட்டங்களை மாநகர் மன்றம் அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


