கோலாலம்பூர், ஜூலை 30- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதைத் தடுக்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று எதிர்க்கட்சித் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார்.
இதன் வழி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஷரத்து நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக பி.கே.ஆர். கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 209 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவ்விவகாரத்தில் பக்கத்தான் உறுப்பினர்கள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றார் அவர்.
இது மக்களின் வெற்றியாகும். இனி வாக்களிக்கும் போது நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். அச்சுறுத்தல், பண மற்றும் பதவி ஆசை காரணமாக கட்சித் தாவுவது இனியும் நிகழாது என தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடை செய்யும் சட்ட மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.


