ஷா ஆலம், ஜூலை 30- கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை மாநில அரசு வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
நேற்று முன்தினம் மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் அந்த சட்டத்தை நிறைவேற்றிய மக்களவையின் நடவடிக்கையை மாநில அரசும் பின்பற்றவுள்ளதாக அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தின் வழியைப் பின்பற்றி மாநில நிலையிலும் அந்த சட்டத்தை நிறைவேற்றவிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் அவைத் தலைவரான மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் விரைவில் சந்திப்பு நடத்தவுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
எந்த இடையூறும் இல்லாத பட்சத்தில் கூடிய பட்சம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் போது இந்த மசோதாவை நாங்கள் தாக்கல் செய்வோம் என்றார் அவர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைப் பின்பற்றி மாநில அரசும் அவ்வாறு செய்யுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் இரு தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றியது.
அந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 209 உறுப்பினர்கள் வாக்களித்த வேளையில் 11 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


