புத்ராஜெயா, ஜூலை 30- தற்போது அமலில் இருக்கும் கிலோ வெ.9.40 என்ற கோழிக்கான உச்சவரம்பு விலை வரும் ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தவுடன் கோழிக்கான உச்சவரம்பு விலையை மறு நிர்ணயம் செய்வது மற்றும் அந்த உணவு மூலப்பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.
கோழிகளுக்கான மானியத் தொகையை அதிகரிப்பதா? சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க அனுமதிப்பதா? மற்றும் வெளிநாடுகளுக்கான கோழி ஏற்றுமதிச் சந்தையை திறந்து விடுவதா? என்பது குறித்து ஆகஸ்டு 31ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரோனால்ட் கிண்டே கூறினார்.
நாட்டிலுள்ள கால்நடைத் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொள்வதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு 2022 விவசாய மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியில் (மஹா) பெவிலியன் அக்ரோடெக் கண்காட்சியகத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை கோழியின் உச்சவரம்பு விலையை வெ.9.40 ஆக அரசாங்கம் நிர்ணயம் செய்தது.
சில இடங்களில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு விலையை விட குறைவான விலையில் கோழி விற்கப்படுவதை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


