கோலாலம்பூர், ஜூலை 29- ‘கேங் சக்காய்‘ எனும் குண்டர் கும்பலில் உறுப்பினராக இருந்தது தொடர்பில் வேலையில்லா நபர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நோர் ஹஷினா அப்துல் ரசாக் முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஜி.ராஜசேகரன் (வயது 32) என்ற அந்த நபர் தலையை அசைத்தார்.
2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு சட்டங்களின் (சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் 2021 ஜூன் 20 ஆம் தேதிக்கும் இடையே ஸ்ரீ சிலாங்கூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக ராஜசேகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனை சட்டத்தின் 130வி(1) பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் ராஜசேகரன் இப்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதே வழக்கு தொடர்பில் மேலும் 23 பேர் உயர் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளதாகவும் துணை ப்பளிக் புரோசிகியூட்டர் மர்யாம் ஜமிலா அப்துல் மானாப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 20 சாட்சிகள் அழைக்கப்படவுள்ளதால் இதே போன்ற இதர வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதற்கு ஏதுவாக ராஜசேகரனுக்கு எதிரான வழக்கையும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற அரசுத் தரப்பு விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
அரசுத் தரப்பின் இந்த விண்ணப்பதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி வழங்கினார்.


