ஷா ஆலம், ஜூலை 29- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்கும் சட்ட திருத்தம் வரலாற்றுப்பூர்வமான ஒன்று என்பதோடு மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் விளங்குகிறது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கூறுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் தேர்தல் நடைமுறை மற்றும் ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் மலரச் செய்துள்ளது என்று ஹராப்பான் தலைமைத்துவ மன்றத் தலைவர் மன்றம் தெரிவித்தது.
எனினும், ஷெரட்டோன் நகர்வு போன்ற துரோகச் செயல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு நாட்டின் அரசியல் சூழல் மற்றும் ஜனநாயகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்று என அது குறிப்பிட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 18 அம்சங்களில் 15 நிறைவேற்றப்பட்டு விட்டது என அந்த கூட்டணி வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இருந்த போதிலும் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள எஞ்சிய மூன்று அம்சங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் பதவியை 10 ஆண்டுகளுக்கும் மேற்போகாத வரையில் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றச் சேவை சட்டமசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது மற்றும் மக்களவையும் மேலவையும் மேலும் சீரான முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக கூட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவது ஆகியவையே அந்த மூன்று அம்சங்களாகும்.
மேலும் நீதித்துறை எப்போதும் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வது தொடர்பான 4வது விதியும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கூட்டணி வலியுறுத்தியது.


