ஷா ஆலம், ஜூலை 29- ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் ஸ்ரீ செர்டாங்கில் 32 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுப்பணித் துறை, மற்றும் கால்வாய் அறக்கட்டளை நிதி ஆகியவற்றிலிருந்து பெறப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
ஸ்ரீ செர்டாங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் வெள்ளம் ஏற்படுவதற்கு அப்பகுதிகளில் பெய்யும் அதிகப்படியான மழையினால் சுங்கை குயோ ஆறு பெருக்கெடுத்து அருகிலுள்ள பகுதிகளில் நுழைவதே காரணம் என்பது சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இப்பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வாக சுங்கை குயோ வடிநிலப்பகுதியில் தடுப்பணைகள் அமைப்பது, ஸ்ரீ செர்டாங் பகுதியில் வடிகால் முறையை மேம்படுத்துவது, ஸ்ரீ கெம்பாங்கானில் நீர் சேகரிப்பு குளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று ஸ்ரீ செர்டாங் பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் கீழுள்ள வடிகால்கள் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


