ஷா ஆலம், ஜூலை ஜூலை 29- அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முழுமையான விண்ணப்பங்கள் அனைத்தும் சிலாங்கூர் நில மற்றும் கனிம வள இலாகாவின் சாசனத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பரிசீலிக்கப்படுவதாக மந்திரி புசார் கூறினார்.
இன்னும் பட்டா கிடைக்கப் பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சிறப்பு செயல்குழுவை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பொதுமக்கள் மற்றும் கட்டிட ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் சிலாங்கூரில் பிரச்னைக்குரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக மாநில நில மற்றும் கனிமவள இலாகா சிறப்பு செயல்குழுவை அமைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எனினும், பட்டாவைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் செய்யத் தவறும் நில உரிமையாளர்கள் அல்லது மேம்பாட்டாளர்களுக்கு எதிராக 1985 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மனை பட்டா சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் நில மற்றும் கனிம வள இலாகா நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று லெம்பா ஜெயா உறுப்பினர் ஹனிசா தல்ஹா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமிருடின் இவ்வாறு கூறினார்.
வீடுகளுக்கான பட்டாவைப் பெறுவதற்கு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவது குறித்து ஹனிசா கேள்வியெழுப்பியிருந்தார்.


