ஷா ஆலம், ஜூலை 29- முதலாவது சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) அடுத்த ஐந்தாண்டுகளில் முழுமையாக சாத்தியம் அடையும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் இடம் பெற்றுள்ள நான்கு கருப்பொருள் வியூகங்கள் சிலாங்கூர் மாநில மக்களுக்கு நன்மைகளையும் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் இதர இனத்தினர் உரிய பலனைப் பெறுவர் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த திட்டம் தற்போது தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனை முழுமையாக அமல்படுத்தும் அதேவேளையில் நாம் கவனிக்கத் தவறிய அம்சங்களை மேம்படுத்துவதற்கான தருணம் இதுவாகும் என அவர் தெரிவித்தார்.
முதலாவது சிலாங்கூர் திட்டம் போன்ற திட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் நாம் கூட்டரசு அரசாங்கம் அமல்படுத்திய பத்தாவது, பதினோறாது மற்றும் பன்னிரண்டாவது மலேசியத் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கிறோம். எனினும், இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம் மாநிலத்தின் முறபோக்கான சிந்தனையைப் புலப்படுத்துவதாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் 21,244 கோடி வெள்ளி மதிப்பிலான முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


