ஷா ஆலம், ஜூலை 29- சபாக் பெர்ணம் வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின் (சப்டா) வழி அம்மாவட்டம் உள்ளுர் மற்றும் வெளியூர் மக்களின் சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியின் வாயிலாக அப்பகுதியில் தொழில்துறைகள் பல்வகைப்படுத்தல் அதேவேளையில் வட்டார மக்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் சப்டா திட்டமாகும். காரணம், எனது தொகுதியான சிகிஞ்சானையும் அது உள்ளடக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சபாக் பெர்ணம் மாவட்டம் விவசாயத் துறையை மட்டும் சார்ந்திருக்க கூடாது. சபாக் பெர்ணம் அல்லது சிகிஞ்சான் ஊர்களின் பெயரை கேட்டவுடன் கடல் உணவுக்கு பெயர் போன இடம் என்ற நினைவு மக்களுக்கு வர வேண்டும் என்றார் அவர்.
இந்த மாவட்டத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த தெளிவைப் பெற இது உதவும் என்று அவர் சொன்னார்.
நமது எதிர்பார்ப்புகள் யாவும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் அடுத்த ஐந்தாண்டுகளில் நிஜமாக கூடும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்
.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக அடுத்த ஐந்தாண்டுகளில் முக்கியத்துவம் தரக்கூடிய திட்டமாக சப்டா விளங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


