ஷா ஆலம், ஜூலை 29- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) தோற்றுவிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் பிரமிப்பூட்டும் வகையிலான அடைவு நிலையை அது பதிவு செய்துள்ளது குறித்து மந்திரி புசார் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள மற்ற கழகங்களுடன் ஒப்பிடுகையில் மாநில அரசின் இந்த துணை நிறுவனம் தனித்துவமிக்க ஒன்றாக விளங்கி வருகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் அல்லது கோலாலம்பூரை எடுத்துக் கொண்டால், மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய ஏதாவது ஒரு கட்டமைப்பு அல்லது கட்டுமானம் பி.கே.என்.எஸ்.ஸினால் உருவாக்கப்பட்டாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக மேம்பாட்டை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கழகம், தற்போது பல்வேறு துறைகள் மற்றும் பல்வகை வர்த்தகங்களில் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எரிசக்தி, தயாரிப்பு, சேவை ஆகிய தொழில்துறைகளோடு சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய நகர மற்றும் வீடமைப்புத் திட்ட உருவாக்கத்திலும் தனது பங்களிப்பை பி.கே.என்.எஸ். தொடர்கிறது என்றார் அவர்.
நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான பி.கே.என்.எஸ். சிறந்த சேவைக்கான விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், பி.கே.என்.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட் அபாஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


