ஷா ஆலம், ஜூலை 29- பெங்குருசான் எசெட் ஆயர் பெர்ஹாட் நிறுவனத்தின் (பி.ஏ.ஏ.பி.) வாயிலாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் லங்காட் 1 நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் நீர் பகிர்வு முறையின் கட்டுமானம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட தாமதமடைந்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குள் 92.58 விழுக்காட்டு கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 90.58 விழுக்காடு மட்டுமே முழுமையடைந்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
தினசரி 113 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையம் கடந்த 2019 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்று செயல்படத் தொடங்கி விட்டது.
எனினும், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தின் நீர் பகிர்வு முறை இன்னும் நிர்மாணிப்பு அளவில் மட்டுமே உள்ளதோடு அடுத்தாண்டில்தான் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தை செயல்படச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்தின் நீர் சேகரிப்பு குளத்திலிருந்து லங்காட் 1 நீர் சுத்திகரிப்பு மையத்தின் குளத்திற்கு குழாய் இணைப்பை பி.ஏ.ஏ.பி. ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.


