குவாந்தான், ஜூலை 28: இன்று அதிகாலை தெமர்லோ ஓய்வு பகுதிக்கு அருகே கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 126 ஆவது கிலோமீட்டரில் (எல்பிடி 1) அவசரப் பாதையில் நிறுத்தப்பட்ட டிரெய்லர் லாரியின் பின்புறத்தில் பெரோடுவா மைவி மோதியதில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்தனர்.
இறந்தவர்கள், கோலாலம்பூரின் சிராஸ் நகரைச் சேர்ந்த டான் வீ லி, 39, மற்றும் அவரது பயணி குவாந்தானில் சுங்கை லெம்பிங்கைச் சேர்ந்த 35 வயதான நூர் சுசிலாவதி சே டெராமன் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி பகாங் சுல்ஃபாட்லி ஜகாரியா கூறினார்.
எனினும் டிரெய்லர் ஓட்டுநருக்கும் உதவியாளருக்கும் காயம் ஏற்படவில்லை.
தனக்கு அதிகாலை 2.47 மணிக்கு விபத்து குறித்து அவசர அழைப்பு வந்தாகவும், பாதிக்கப்பட்ட இருவரும் வாகனத்தில் சிக்கிக் கொண்டனர், அக்காரின் முன்பகுதி முற்றிலும் நசுக்கப்பட்டது என ஜுல்ஃபாட்லி தெரிவித்தார்.
இதற்கிடையில், தெமர்லோ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது அசார் முகமது யூசோஃப் கூறுகையில், டான் தனது வாகனத்தை கட்டுப்படுத்த தவறி சறுக்கி லாரியின் பின்புறத்தில் மோதியதால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
“சூடான இன்ஜின் நிலையால் , லாரி அங்கேயே நின்றதாக நம்பப்படுகிறது. பலியான இருவருக்குமே தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பரிசோதனையின் முடிவுகள் பெறப்பட்டு, விபத்து குறித்து பிரிவு 41(1) சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் படி விசாரிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களும் தெமர்லோ வில் உள்ள சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.


