ஷா ஆலம், ஜூலை 28- கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்தடையினால் உண்டான இழப்பு குறித்த அறிக்கையை மாநில அரசு இன்னும் பெறவில்லை.
இதன் தொடர்பான அறிக்கையை தெனாகா நேஷனல் (டி.என்.பி.) நிறுவனத்திடமிருந்து தாம் விரைவில் பெறவிருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த அறிக்கையை நான் இன்னும் பெறவில்லை. அந்த அறிக்கையை டி.என்.பி. விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலாங்கூர் மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மின்தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டி.என்.பி. நிறுவனம் கட்டணக் கழிவை வழங்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என நிருபர்கள் கேட்ட போது, அதன் தொடர்பில் முடிவெடுப்பது அந்நிறுவனத்தைப் பொறுத்தது என்றார்.
அது டி.என்.பி. நிறுவனத்தை பொறுத்தாகும். நான் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. தடையில்லா மின்சாரத்தை எவ்வாறு வழங்குவது என்பதுதான் முக்கியம். அது சவால்மிகுந்த ஒரு விஷயமாகும் என்றார் அவர்.
நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக சிராஸ், சுபாங், அம்பாங், கெப்போங், ஹர்த்தாமாஸ், புக்கிட் டாமன்சாரா உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.


